Friday, November 1, 2024

Increase in Trees Increases righteousness

 

தருஓங்கு

டேய் அருண் !!! அருண் மொழி…இ.இ.இ.இ “ என்று தூரத்தில் போய் கொண்டிருந்த நண்பனை அழைத்தான் ரஞ்சித்.

“டேய் ரஞ்சித் !!! என்னடா ??? ஏன் இவ்வளவு பதைபதைப்பா ஒடி வர ??? “ என்றான் அருண் மொழி

“ அங்க டிமான்டி காலனியில ப்ரொபசர் ஜோசப் இருந்தாரு இல்ல. அவரு கரோனாவால இறந்துட்டாரு.  ஆனா அவர் உடல அந்தக் காலனிக்குள்ள கொண்ட வரக்கூடாதுன்னு அந்த காலனிக்காரங்கள்ளாம் சண்ட போடறாங்கடா. வாடா போய் என்னன்னு பார்ப்போம் “

இரண்டு பேரும் போய் அங்கருந்தவங்க எல்லோரையும் சமாதானப்படுத்த மிகவும் கடுமையா முயற்சி செஞ்சாங்க. முடியாம கலெக்டர் எஸ்.பிக்கும் போன் செஞ்சு வரவழைச்சு அவங்க சமூக கல்லறையில புதைப்பதற்கு ஏற்பாடு செஞ்சு அவரோட மனைவிக்கு உதவி பண்ணிட்டு வந்தாங்க.

இதெல்லாம் முடிச்சு உடலும் மனசும் சோர்வா இரண்டு பேரும் சைக்கிள்ள வந்த சுக்கு காபி வாங்கி குடிச்சாங்க .

“ மச்சான் என்னடா வாழ்க்கை இது ? மனுஷங்க மனுஷதனமையே இல்லாம சொந்தக்காரான்னு பாக்க மாட்டேன்றாங்க நண்பன்னு பாக்க மாட்டேன்றாங்க நம்ம சமூகத்த சேந்தவன்னு பாக்கமாட்டேங்கறாங்க நேத்து வரைக்கும் ஒத்தர் வீட்டுக்கு ஒத்தர் போயிட்டு வந்திட்டு இருந்தாங்க. ஆனா இன்னிக்கு பாருடா நிலைமய ??“ என்று அங்கலாய்த்தான் ரஞ்சித்.

“ ஆமாடா !!! எனக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கு . ஒரு சின்ன கிருமி நம்ம எல்லாம் இப்படி பிரிச்சுருச்சே “  என்றான் அருண்மொழி.

“ மனுசன் தான்டா இந்த சாதி உசத்தி அந்த மதம் உசத்தினு அடிச்சுகுறோம். இந்த கிருமிய பாருடா எந்தவித பாகுபாடும் இல்லாம் எல்லார் மேலயும் ஒட்டிக்குது “ ரஞ்சித்

“ கிருமிக்கெல்லாம் மனித உடம்புங்கிறது ஒரு உணவுக் கூடம், அதனால கிடைக்கிற செல்லுல எல்லாம் வந்து ஒட்டிக்கிடுது “அருண்மொழி

“ அப்ப எல்லார் உடம்புலேயும் கிருமி ஒட்ட தான செய்யும் . அப்ப நம்ப நாட்டில 130 கோடி பேர்ல கிட்டதட்ட 10 லட்சம் பேர் தான் இறக்கிறாங்க ??? எல்லாரையும் தாக்காதா ?? கிருமிகளும் ஜாதி பாத்தும் பணக்காரங்க ஏழைங்கன்னு பாத்து தான் தாக்குமா ??” ரஞ்சித்

“ கண்ணா !!! அடிப்படை இயற்கை விஞ்ஞானம் புரிஞ்சுக்கணும்.  கிருமிகள் இல்லாம இந்த பூமியில எந்த செயல்பாடும் இல்லை. நம்ம வீட்டுல பாலை தயிராக்கறதும் கிருமிகள் தான். ஒரு உடல் இறந்தவுடனே எங்கிருந்து வருது புழுக்கள் ??? எந்த காட்டில மேட்டுல இறந்தாலும் புழுக்கள் இறந்த  உடல் மேல புழுக்கள் வந்துடுதே  எப்படி ? முடி வைச்ச பிளாஸ்டிக் கவர்லேர்ந்து கொட்டின பருப்புகள் கூட நாளாக ஆக சிறு புழுக்கள், செக்கான்கள் எப்படி வருது ?” அருண்மொழி

“ டேய் அப்படின்னா நம்ம உடம்புல  எப்பவுமே கிருமிகள் இருக்கு ,அதனால நோயொட தான் வாழறோம்னு சொல்றியா ?” ரஞ்சித்

“ இல்லப்பா கிருமிகள் எல்லா உடம்புலேயும் நோயாக மாறுவதில்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறவங்களை எவ்வளவு காபந்து பண்ணி வச்சிக்கிட்டாலும் நோய் வந்து தாக்கும். நோய்க்கு மூலக் காரணிகள் பலகீனமான மனம், உணவு , சுற்றுச் சூழல் தான்.   இப்ப நம்ம நாட்டிலேயே நோய் தொற்று ஏற்பட்டவங்கள்ள வெறும் 2% மட்டும் தான் இறந்திருக்காங்க.  மீதி 98% சதவிகிதம் பேர் பொழச்சுகிட்டாங்க “அருண்மொழி

“ இயற்கை எல்லோருக்கும் ஒரே மாதிரி  உடம்பு தான் கொடுத்திருக்கு . அதே இரண்டு கைகள், கால்கள், கண்கள், காதுகள் தானே அப்புறம் எப்படி இந்த வேறுபாடு ?? இயற்கையும் பாகுபாடு பாக்குதா ? இதுலேயும் ஏதாவது இட ஒதுக்கீடு இருக்கா ? எல்லாருக்கும் எல்லாம் சமம்மா கிடைக்கும்னுதான்  நான் விரும்பறேன் “ ரஞ்சித்

“ உன் நல்ல நோக்கத்த பாராட்டுறேன்.  ஆனா உங்க வீட்டுலேயே பாரேன்.  நீயும் உங்கண்ணன் செந்திலும் ஒரே தாய் தந்தைக்கு தான பொறந்தீங்க. நீ எப்பவுமே அரசியல், போராட்டம் , சமூக நீதி – அநீதி , வாழவுரிமைன்னு போராட்டிருக்கே . தேர்தல் பிரச்சாரம்னு போயிட்டு சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, பார்டி அது இது சுத்தற. ஆனா உங்க அண்ணன பாரு மரம் நடறது, யோகா செய்யறது , புள்ளைகளுங்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறது. அவன நான் என்னிக்கும் டீ கடையிலேயோ டீ, காபி குடிச்சோ வெட்டி அரட்டைஅடிச்சோ பாத்தது இல்ல. அசைவம் கூட தொடமாட்டேங்கிறான்” அருண்மொழி

“ டேய், அவனெல்லாம் நம்மோளட சேர்க்காத, அவர் பெரிய ஞானி மாதிரி மரம் , செடி, கொடி, மட்டை, கொட்டை, பட்டைனு ஆன்மீகமா பேசிகிட்டு அலையறான். அவன நெனச்சுதான் எங்கம்மா எப்பவும் கவலைபடறாங்க தெரியுமா ?  இவனுக்கெல்லாம் எவனாவது பொண்ணு கொடுப்பானடா ?? “ ரஞ்சித்

“ இதில நீ கேட்ட முக்கியமான கேள்விக்கு பதில் ஒரு தாய் வயித்தில பொறந்த இரண்டு பேரும் கூட ஒரே குணாதிசயம் மட்டுமே இல்ல உடலைமப்பும் ஒரே மாதிரி இருக்காது. அதனால நோய் எதிர்ப்பு தன்மையும் மாறித்தான் இருக்கும்.  அதனால் இந்த உலகத்துல ஒரே குணாதிசயங்கள் உள்ள இரண்டு பேர பார்க்கிறது ரொம்பவே அபூர்வம்.  இங்க சமத்துவம் பேசுவது இயற்கைக்கு முரண், ஏன்னா இயற்கை இரண்டு வேப்பங் கொட்டையை கூட ஒரே மாதிரி படைப்பதில்லை “அருண்மொழி

“ டேய் என்னடா ஒரேடியா அடிச்சுவிடற !!! அப்ப சமத்துவம் ,  அதற்கான போராட்டம் எல்லாம் தேவயில்லைங்கிறயா ?? விடுதலை போராட்டம் தொடங்கி நம்ம ஊர்லயும் உலகத்துலேயும் போராட்டங்கள் மூலமாகவே நாம எல்லா உரிமைகளையும் பெற்று இருக்கிறோம்.  இப்ப பாத்தல்ல அந்த ப்ரொபசர் உடல் அடக்கத்திலேயும் நாம போராடி தான் ஜெயிச்சோம். அங்க பாரு எங்கண்ணன இந்த வெயில்ல அரசமரத்தடியில கண்ண மூடிகிட்டு ஒண்ணும் செய்யாம உட்கார்ந்து இருக்கான் பாரு.  வாடா அவனை போய் எழுப்புவோம் “  ரஞ்சித்

“ ரஞ்சித் ! சும்மாயிருடா ! அவனோட தவத்த கலைக்கக் கூடாது “அருண்மொழி

“ ஆமாடா !! அவரு பெரிய சாமியாரு. நீ அவரோட முக்கிய சீடரு . சும்மா வாடா “ரஞ்சித்

“அண்ணா டேய் !!! எழுந்திருடா. நாங்கள்லாம் பால் மாதிரி பொங்கிட்டிருக்கோம். இவன் பாட்டுக்கு அமைதியா இருக்கானே “ செந்திலை உலுக்கினான் ரஞ்சித்.

செந்தில் மெதுவாக கண் திறந்து “ என்னடா ரஞ்சித் ?? இன்னிக்கு என்ன பஞ்சாயத்து ?? இங்க மரத்தடிக்கு வந்திருக்க ??”

“ செந்தில் !! எப்படிடா ஒண்ணுமே நடக்காத மாதிரி கேக்குகிற ?? ஊரே இந்த கரோனா கிருமியால  அல்லாடிகிட்டு இருக்கு. செத்தவன புதைக்கிறதுக்கு கூட வழி விட மாட்டேங்கிறாங்க. நாங்க போய் போராடிட்டு வர்றோம். நீ பாட்டுக்கு மரத்தடியிலே ஜாலியா காத்து வாங்கிட்டு இருக்கே“ ரஞ்சித்

“ செந்தில் !! இவன விடுறா இவன் உன்ன சீண்டிகிட்டு தான் இருப்பான். எப்படி தவம் இயற்றுனும் எனக்கு சொல்லி கொடுடா. எனக்கெல்லாம் இப்படி மரத்தடியில உட்கார்ந்து கண்ணை மூடினா காத்துல நல்லா தூக்கம் தான்டா வருது “அருண்மொழி

“ கண்ண மூடி உட்கார்ந்து பண்ணுறதும் மட்டும் தவம் இல்லிடா !! இப்ப கடந்த இரண்டு மணி நேரமா ஒரே சிந்தனையோட அந்த ப்ரொபசர் உடலை அடக்கம் செய்ய நீங்க ரெண்டு பேரும் போராடினதும் ஒரு வகையில தவம் தான் “ செந்தில்.

“ பாருடா நாம ரெண்டு பேரும் தவம் பண்ணினேங்கிறான். டேய் நாங்க அங்க போய் கத்தோ கத்துனு கத்தி இரண்டு மணி நேரம் போராடறதும் ஒரு இடத்துல உட்கார்ந்து  ஒண்ணுமே செய்யாததும் ஒண்ணா ??” ரஞ்சித்

 

“ வானத்தில் எங்கெங்கோ அலைஞ்சாலும் மேகங்கள் மழையாய் பூமியில் ஒரு இடத்தில் இறங்க எங்கும் நகராமல் நிற்கும் மரங்கள் தான் முக்கியமான காரணம்.  அந்த மேகங்கள் உருவாக காரணமே மரங்கள் தான். இலைகளில் சேமித்து வைக்கும் தண்ணீரின் அளவு பல இலட்சம் லிட்டர்கள் அதையே சூர்ய ஒளியினால் ஆவியாக்கி மேகமாக்குகிறது மரங்களின் முக்கியமான பணி “ என்று தொடர்ந்த செந்தில்

“ மரம் ஒரே இடத்தில் நின்னாலும் இந்த பூமியின் இயக்கத்திலும் அனைத்து உயிர்களின் அடிநாதமான இயங்குவது மரங்கள். நம்ம கிராமங்களில் முன்னாடி காலங்களில் பஞ்சாயத்து கூட்டம் நடத்தி மக்களுக்கு நல்ல தீர்ப்பு கொடுத்து நியாயமாக ஊர்களை நிர்வகித்தது கிராமங்களின் இருந்த மரங்களின் அடியில் தான் “ என்றான்.

“ ஆமாடா ! ஸ்கூல்ல மரத்திடியில வச்சு பாடம் நடத்தும் போது நமக்கெல்லாம் நல்லா புரியும் இல்ல “அருண்மொழி

“ ஆமா ! மரத்தடியில தான் ஞானம் எளிமையா கிடைக்கும் ஏன்னா மரங்கள் பிரபஞ்சத்துடன் எப்பவுமே தொடர்பிலேயே இருக்கின்றன. தனக்கு கிழ உக்காரவங்களுக்கு ஒரு ஆன்டெனா மாதிரி ஞானத்தை வரவழைத்து தருது “

“ ஏன்டா !! அப்ப பள்ளிக்கூடம் காலேஜெல்லாம் வேண்டாங்கிறயா ?? இப்படித்தான்டா மரத்தடி சாமியார்கள நம்பி நாம் விஞ்ஞானத்தில பின் தங்கிட்டோம்.  செவ்வாய் கிரகத்திற்கு கூட நாம விண்கலம் அனுப்பற அளவிற்கு விஞ்ஞானம் வளர ஆரம்பிச்சுருக்கு “ இடைமறித்தான் ரஞ்சித்

“ செவ்வாய் கிரகம் எந்த நிறம்னு உங்க விஞ்ஞானம் எப்ப கண்டுபிடிச்சது ?” செந்தில்

“ அதெல்லாம் அமெரிக்காகாரன் 50 – 60 வருஷத்துக்கு முன்னாடி டெலஸ்கோப் வச்சு கண்டுபிடிச்சாங்க” ரஞ்சித்

“இல்லடா தம்பி, நம்ப முன்னோர்கள் எவ்வளவு தெளிவா அந்த கிரகத்தை செவ்வாய், சிவப்பு நிறம்னு சொன்னார்கள் ?? நவீன விஞ்ஞானிகள் தான் முதல் முதலா ராக்கெட் அனுபிச்சு இந்த கிரகத்தை கண்டுபிடிச்சாங்ககிறது தான் உண்மைனா அப்ப எப்படி மரத்தடி சாமியார்களுக்கு இது தெரிஞ்சுது ? யோசி தம்பி ” செந்தில்

“ அப்ப உங்க மரத்தடி சாமியார்கள் இப்ப நம்ப கிட்ட இருக்கிற விஞ்ஞான வளர்ச்சி எல்லாம் அன்னிக்கே கண்டுபிடிச்சு ராக்கெட்லாம், விமானமெல்லாம் விட்டிருக்க வேண்டியது தானே ? ஏன் விடல ??” ரஞ்சித்

“தம்பி, நமது பரு உடல் தாண்டி ஒவ்வொரு உருவத்திற்கும் 5 முதல் 7 கண்ணுக்கு தெரியாத கவச திறைகள் இருக்கு. இந்த கண்ணுக்கு தெரியாத சூட்சம உடல்கள் மூலமாக நாம் பிரபஞ்சத்தில் எங்கும் போயிட்டு வரக்கூடிய தன்மையை நல்ல குருவின் மூலமாக கற்றுக் கொண்டு போய் வந்து அந்தக் கால முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள் விவரிச்சே ஒவ்வொரு கிரகத்தின் நிலைகளை நமக்கு பாடலாக்கி கொடுத்திருக்காங்க. அப்படித்தான் நமது சித்தர்கள் செவ்வாய் கிரகத்தை தெளிவாக சிகப்பான கிரகம்னு சொன்னாங்க. இந்த சூட்சம உடல் அல்லது திரை மூலமாக செல்ல நமக்கு எந்த வாகனமும் தேவையில்லை. ஆன்மாவிற்கு இந்த ஆற்றல் உண்டு.  ஆன்மா என்பதை விளக்கும் விஞ்ஞானம் தான் ஆன்மீகம்“

“ டேய் டேய் !!! உங்கிட்ட காதை கொடுத்த உடனே எங்களுக்கு தெரியாத எதை எதையோ சொல்லி ரீல் விடாதடா.  விஞ்ஞானிகள் எல்லாம் இதைக் கேட்டா டென்ஷன் ஆகிடுவாங்க. ஆன்மீகத்த நம்பறவன் விஞ்ஞானியா இருக்க முடியாதுடா.” ரஞ்சித்

“உலகத்தில் எந்த நாட்டில் அதிகமான விஞ்ஞான கண்டுபிடிப்புகள் வெளிவந்திருக்குது ??”

“அமெரிக்கா !! “ ரஞ்சித்

“ஜெர்மனி” அருண்மொழி

“ இந்த நாடுகளில் தான் சம்ஸ்கிருதம் படிக்க அதிகளவில் வாய்ப்பு ஏற்படுத்தி தராங்க. தமிழ் இலக்கியங்களோட ஆராய்ச்சியும் அதிகளவில் போய்கிட்டு இருக்கு.  நமது சித்தர்கள் , முனிவர்கள்  ஒலியின் மூலமா நமது பிரபஞ்சத்தின் இயக்க விதிகளை தெளிவா பதிஞ்சு இருக்காங்க. இப்பதான் நம்ம காலத்தில் ஐடி துறையில கிளவுட் கம்ப்யுடிங் பெரியளவில் பயன்பட ஆரம்பிச்சுருக்கு. அகத்தியர் முதல் திருமூலர் போன்ற பல சித்தர்கள் தங்கள் தவங்களின் மூலமாக பிரபஞ்சத்தை உணர்ந்து அதை அண்ட வெளியில் பதிந்து வச்சுருக்காங்க. தான் உணர்ந்த உன்னத அறிவை உணராதவர்களுக்காக சிலைகளில் உருவமாக வடித்து உணர வாய்ப்பு ஏற்படுத்தினாங்க. பதஞ்சலி என்கிற முனிவர் தான் உணர்ந்த அணுவின் ஆட்டத்தை நடனமாக விவரித்து அணுவின் ஆட்டமின்றி உலகில் ஒரு இயக்கமும் இல்லை என்பதை உணர்த்த நடராஜர் என்ற உருவம் வடிச்சார் “ செந்தில்

“ அண்ணா டேய் !! இந்த விஷயங்களுக்கும் நீ மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி தியானம் செய்யறதுக்கும் என்னடா சம்பந்தம் ?” ரஞ்சித்

“ தம்பி ! ஞானம் பெற மிகச் சிறந்த இடம் மரத்தடி தான்னு ஏற்கனவே சொன்னேன்ல. சிவன் கோவில்ல நாம பாக்குற குரு பகவான் கல் ஆலமரத்தின் அடியில் அமரந்து தனது சீடர்களுக்கு எந்த வாக்கியமும் உபதேசிக்காமலே ஞானம் வழங்கினார்னு சொல்வாங்க. அதாவது பிரபஞ்சத்தில் பல முனிவர்கள் அண்ட வெளியில் சேமித்து உள்ள ஞானத்தை மரங்கள் மூலமாக நாம டவுண்லோட் செய்து கொள்ளலாம்” செந்தில்

“ செந்தில் !! இந்த ஞானம் நம்ம பிரச்சினைகளை தீர்க்குமா ??” அருண்மொழி

“ நிச்சயமா !! பிரச்சினைகளின் மூலத்தையே நமக்கு காட்டிடும் “ செந்தில்

“ அப்படின்னா , நம்ம ஊர்ல நடக்குற எல்லா அநீதிக்கும் மரத்தடியில உட்கார்ந்தா விடிவு கிடைக்குமா ?? நான் நம்ம ஊர்காரங்களை எல்லாம் அழைச்சுட்டு வரேன், எல்லா பிரச்சனையையும் தீர்த்திருவோம்” ரஞ்சித்

“ அதுக்காகத்தான் நாம பல இடங்களில் மரங்களை நட்டுட்டு வரோம் “செந்தில்

“  மரம் நட்டா மழை வரும்.  எல்லா பிரச்சினையும் தீருமாடா ??” ரஞ்சித்

“மரம் என்பதற்கு முதல் பெயரே தரு தான். எல்லாவற்றையும் தரவல்லது . கற்பகத்தரு  என்றும் சொல்வார்கள். தருவோங்க ஓங்க தருமம் ஓங்கும் என்று அருட்பிரகாச வள்ளலார் ‘தெய்வமணிமாலை’யில் குறிப்பிடுகிறார். இன்றைய உலகச் சூழ்நிலையை உற்று கவனியுங்கள். காடுகளின் பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது , இதனால் எல்லா பிரச்சினைகளும் அதிகரித்து வருகிறது“ செந்தில்

“கரெக்டுடா, மரம் வளர வளர உலகம் வெப்பமயமாதல் குறையும் முக்கியமா நம்ம மண்ட சூடு குறையும் , அதனால நம்ம மூளை விதவிதமா யோசிக்காம அமைதியாயிடும். அப்பறம் என்ன மனுஷ்ன் அமைதியாயிட்டாலே பூமிக்கு வேற எந்த உயிரினத்தாலேயும் பிரச்சனையே வராதே. டேய் சூப்பர்டா “  அருண்மொழி

“ திருசெந்தூர் செந்தில் ஆண்டவர்னாலே சூரசம்ஹாரத்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும்.  அதிலேயும் முக்கியமான விஷயம் மற்ற தெய்வங்களின் புராணங்களில் அந்த தெய்வங்கள் முக்கிய அசுரனை கொல்வதாக வரும், ஆனால் சூரபத்மன் வதையில் மட்டும் அசுரன் பல வடிவங்களில் மாறி மாறி சென்றபின் கடைசியாக மாமரமாகி நின்றான்னு வரும். பல உருவங்களை அழித்த வேலன் மர உருவத்தில் உள்ளவனை தன்னுடனே ஏற்றுக் கொண்டார். இதில் வரும் செய்தி அசுரன் தன்னுள் இருக்கும் மர நிலையை உணர்ந்தவுடன் இறைவனும் அவனை தனதாக்கி கொண்டான் அல்லது அசுரனும் மாமரமானதால் வழிப்படத்தக்க தெய்வமாகிவிட்டான்னு விளக்குது கந்த புராணம் “  செந்தில்

“ செந்தில் அண்ணா !! நீ இனிமே எங்க மரம் நட போனாலும் என்னையும் அழைச்சுட்டு போ. தருமமிகு சென்னையை உருவாக்க நானும் முயற்சிக்கிறேன்” ரஞ்சித்

 

No comments:

Post a Comment