Sunday, July 27, 2014

Male Infanticide - ஆண் சிசுக் கொலை

ஆண் தான் ஆனா சிசுக் கொலை

"என்னங்க ஆபிஸ்க்கு இன்னம் கிளம்பலையா " கேட்டார் பக்கத்துவீட்டு பக்கிரிசாமி .

" கிளம்பனுங்க. செடிக்கு தண்ணிவிட்டுட்டு கிளம்பனும் " -சுப்பிரமணி 

" இந்த பப்பாளியா வளர்க்கிறீங்க ?" பக்கிரி 

" ஏன் இந்த செடியில  ஏதாவது ப்ரச்சனையா ? " - சுப்பிரமணி 

" இது ஆண்  மரங்க . காய்க்காது. இதில் பூவெல்லாம்  உதிர்ந்திரும் " பக்கிரி 

" அதனாலென்னங்க. அதுவும் ஒரு உயிர்தானங்க ?"- சுப்பிரமணி 

" அது தேவையில்லாம இடத்த அடைச்சுக்கிட்டு - நல்ல  காய்கிற மரமா வைங்க - நமக்கு பயன் தரணும் இல்லிங்கபக்கிரி  

" இந்த ஆண் மரத்து பூக்களிலிருந்து தானேங்க வண்டு மகரந்தம் எடுத்து பெண் மரத்துக்கு கொடுத்தாதானே பெண் மரம் காய்க்கும் ? " - சுப்பிரமணி

" எங்க  ஊருல இந்த காய்க்காத மரத்தை வெட்டிருவோம்பக்கிரி  


அதற்குள் சுப்பிரமணியோட அம்மா பார்வதி அங்கு  வந்தார்.

" என்னடா நேரமாவல அப்பறம் என்கிட்ட வந்து நேரமாவுதுன்னு பறக்காத" -பார்வதி 

" இல்ல  சாரோட பேசிக்கிட்டிருந்தேன். வரேன்  சார் . கிளம்பனும் " குளிக்க துண்டு  எடுத்துக் கொண்டு கிளம்பினான் 
- சுப்பிரமணி. அவன் போன பிறகு - அவன்  அம்மா பார்வதி 

"  இவன் இப்படித்தான் தம்பி. எல்லா செடியும் ஒரு உயிர்தான்னு கண்ட கண்ட செடியெல்லாம் வளர்க்கிறான். தேவையில்லாதத வெட்ட விடமாட்டேங்கிறான். இவங்க தாத்தா ஊருக்கு போயிருந்தப்ப மாடு  ஒரு காளை கன்னு போட்டிருந்தது. இந்த  காலத்தில காளை மாட்ட வெச்சுக்கிட்டு  என்ன பண்ணறது - உழறதுக்கு டிராக்டர் வந்துடுச்சி, மாட்டு வண்டி எல்லாம் இப்ப கிராமத்தில கூட கம்மியாயிடிச்சி.  காளை கன்னு இருந்தா  பசுக்கிட்ட பால் அதிகம் குடிக்கும் அதை வளர்க்க வைக்கோல் கூட கிராமத்தில் இல்ல இப்ப அதனால கன்னு வேணாம்னு தாத்தா  கொன்னுட  சொல்லிட்டார்."  

சுப்பிரமணி குளிக்க போனவன் - அவர்களின் பேச்சு குளியலறையில் மெதுவாக கேட்டது. தண்ணி குழாயை  திறக்காமல் பொறுமையாக மேற்கொண்டு கேட்டான் .

" இவன் தாத்தாவோட சண்டைக்கு  போய்ட்டான். இவனை அங்கிருந்து  சமாளிச்சு  கூட்டிக் கொண்டு வர நானும் இவங்க  அப்பாவும் ரொம்ப  கஷ்டப்பட்டோம். தாத்தா தோட்டத்தில வளக்கிற  ஆடு கோழிகள்  கூட  கொல்லக்  கூடாதுன்னு ஒரே  அடம் பிடிச்சான்" - சொன்னார் பார்வதி 

" இந்தக் காலத்துக்கு வினோதமா  இருக்காரே உங்க மகன். அவனவன் மனுஷனையே  அடிச்சு  சாப்பிடறான். இவரு ஒரு பலன் தராத மரத்துக்கு கூட தண்ணி விடறாரே"- பக்கிரி 

" அதான்பா எனக்கு இந்தக் காலத்தில சமுதாயத்தில ஒட்டாம  எப்படி இவன் பொழைக்கப் போறான்னு கவலையா  இருக்கு - உங்க வீட்டுக்கு இந்த பப்பாயா மரம் தொந்தரவா இருந்தா சுப்பிரமணி ஊருக்கு போன  சமயமா பாத்து வெட்டிக்குங்க- நான் காத்து அடிச்சு விழுந்துச்சுனு சொல்லிக்கறேன்"


சுப்பிரமணி செடி கொடிகள் தன்னோடு பேசுவதை உணர்ந்தான்  , ஆடு மாடு கோழிகள் எல்லாம் வெளிப்படுத்தின அன்பில் நெகிழ்ந்தான்ஜீவனுள்ள ஒவ்வொரு உயிரும் சிவன்  தான்னு  தோன்றியது. ஆனா அவன  மாதிரியே  உருவம் கொண்ட  உயிரனங்களை மட்டும்  புரிந்து  கொள்ளமுடியவில்லை- பெண்  சிசுவை  கொல்லும் மனசு காளை  கன்றுகளையும் கொல்லுதே - காய்க்காத பப்பாளியும் கல்யாணத்துக்கான பெண்ணும்  வெறும்  செலவு கணக்குத்தானா? சுப்பரமணிக்கு தான்  உணர்ந்ததை மற்றவருக்கு புரிய வைக்க முடியாது  என்பது மட்டும் புரிந்தது.