செ பு பே நி
"செ பு பே நி இரண்டு கொடுங்கள் " என்றான் தமிழ் என்கிற தமிழேசன்.
கண்டக்டர் எங்களை ஏற இறங்க பார்த்தார்.
கண்டக்டர் "எங்க...........????" என்று வெகுண்டார்.
அதற்குள் ஒரு வெளிமாநில பெண் கண்டக்டரிடம் " அன்னா !!! சி எம் பி டி "
உடனே கண்டக்டர் அந்த பெண்ணுக்கு ஒரு பயணச்சீட்டு அளித்தார்.
மறுபடியும் எங்களிடம் "எங்க ?" என்றார்
![]() |
koyambedu-CMBT- செ பு பே நி |
"செ பு பே நி இரண்டு கொடுங்கள் " மறுபடியும் தமிழ்.
கண்டக்டர் முழிக்க , தமிழின் நண்பன் சுரேஷ் இடைமறித்து " ரெண்டு கோயம்பேடு ஸார் !!! "
" அப்படி தெளிவா சொல்ல வேண்டிய தானே - செ .பு . நி -ன்னு ஏதோ சொல்லி காலங்கார்த்தால கழுத்தறுக்கிறீங்க "
என்று முறைத்தார் கண்டெக்டர்.
" ஐயா! நடத்துனரே. சி.எம்.பி.டி என்றவுடன் அயல் பெண் சொன்னால்கூட புரிகிறது செ.பு.பே .நி தமிழில் தமிழன் சொன்னால் ஏன் புரிவதில்லை ? " வம்பிழுத்தான் தமிழ்.
" யோவ் !! காலையில உனக்கு டைம் பாஸ் பண்ண நானா கிடச்சேன் - தமிழ்ல கோயம்பேடுன்னு சொல்ல வேண்டியதுதானே " நடத்துனாரான கண்டக்டர்.
" ஐயா ! உங்களுக்கு தமிழும் தெரியவில்லை தமிழர் நாகரிகமும் தெரியவில்லை " மீண்டும் தமிழ்
" இந்த பேருந்து இயக்கப்படுவதே பயனிகளுக்காகத்தான், பயணிகள் பயணச்சீட்டு வாங்கினால்தான் உங்களுக்கு சம்பளமே. பயணிகளை மரியாதையுடன் நடத்துங்கள்" சீறினான் தமிழ்.
" யோவ் - சொம்மா டிக்கெட் வாங்கினோமா போனோமான்னு இல்லாம- நொன நொனன்னு பேசிக்கின்னே வர" கண்டக்டர் .
" தமிழ் வாழ்க என்று பலகை வைக்கும் அரசாங்கம் வைத்த பெயர் தான் 'சென்னை புறநகர் பேருந்து நிலையம் '- அதன் சுருக்கமே ' செ பு பே நி ' என்பதை ஏன் நீங்கள் பயன் படுத்தக்கூடாது ? "
" அய்யா உங்கள் போக்குவரத்து தொழிற்சங்கத்தின் ' ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில்' கலந்து கொள்ளும் நீங்கள் - தமிழ்- ஹிந்தி வந்தால் சாகும் என்று கோஷம் போடுகிறீர்கள் - இங்கிலீஷினால் சாவது பரவாயில்லையா ?? தமிழ் வாழவேண்டும் என்றால் தமிழில் தானே பேசவேண்டும் " தமிழ் பொறிந்து தள்ளினான்.
" அய்யா சாமி ஆளைவிடு -செ .பு.பே .நி -வந்துடுச்சி - செ.பு.பே.நி லாம் இறங்கிக்கோ" நடத்துனர் அலறினார்.
" சார் கோயம்பேடு வந்தா சொல்லுங்க சார் " என்றார் அப்பாவியாய் ஒரு வெளியூர் பயணி.
" எல்லா எழவும் இந்த இடந்தான் இறங்கு - இது தான் லாஸ்ட் ஸ்டாப் -எல்லாம் இறங்கிடுங்க " கடுகடுத்தார் கண்டெக்டர்.
" ஏண்டா இப்படி எல்லார் எதிர்லேயும் வீண் விதண்டா வாதம் செய்யற- தமிழ்ல பேசி என்னடா சாதிக்கப்போற " என்று சலித்தான் சுரேஷ் தமிழிடம்.
" எல்லாமே பழக்கம் தான். பழகக் பழக பழக்கமாகி எளிமையாகிவிடும் " என்றான் தமிழ்.
" தமிழ்ல பல வார்த்தைகள் கஷ்டமா இருக்குடா உச்சரிக்க. இங்கிலீஷ் பாரு எவ்வளவு சிம்பிளா ஈசியா இருக்கு எழுத பேச" என்றான் சுரேஷ்- மேலும் " இங்கிலிஷ்ல பாரு - லேட்டஸ்ட்டா எல்லாத்தையும் விவரிக்க முடியுது- ஆனா தமிழ்ல பலதுக்கு என்ன வார்த்தைனே தெரியல" .
" தமிழிலேயும் புது பொருட்கள் ,பயன்பாடுகளுக்கு - தமிழ் அருமையான சொற்களை நல் தமிழர்கள் வெளிபடுத்திக் கொண்டேதான் இருக்கிறார்கள் - அதனை தொடர்ந்து பயன்படுத்த அதுவும் எல்லோருக்கும் பழகிவிடும்-உதாரணத்திற்கு பிளாஸ்டிக்கிற்கு 'ஞெகிழி ' என்று அருமையாய் அதன் குணத்தின் அடிப்படையில் பெயரிட்டுள்ளனர் " என்றான் தமிழ்
" எனக்கு எழத்தாளர் சுஜாதா எழுதிய ஒரு சிறுகதை ஞாபகத்துக்கு வருது - அதுல தமிழையும் இங்கிலிஷ்ல மாதிரியே சுருக்கி சுருக்கி பேசி புரிஞ்சுதுகறதுக்கு "புரி" ன்னும் புரியலங்கறதுக்கு "அபுரி " ன்னும் எழுதியிருப்பார் - அது போலத்தான் இன்னிக்கு இருக்கிற நிலமைல ஆகும்ன்னு தோணுது " அங்கலாய்த்தான் சுரேஷ்.
" அதோ ஒரு ஆட்டோ வருது அதுல மதுரவாயில் போயிடலாம் " என்ற சுரேஷ் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தான்.
உட்கார்ந்த பின் தமிழிடம் கேட்டான் "டேய் - ஆட்டோவுக்கு தமிழுல என்னன்னு சொல்லி கூப்பிடுவீங்க - மூணு சக்கர வாகனம்னா - ரோட்டுல நின்னுகிட்டு 'மூணு சக்கர வாகனம்னு' கூப்பிட்டா எந்த ஆட்டோ டிரைவருக்காவது புரியுமா இல்ல நிறுத்துவாங்களா ??? ஏங்க நீங்க நிறுத்துவீங்களா ??" என்று கேட்டான் ஆட்டோ டிரைவரிடம்.
ஆட்டோ டிரைவர் " அவ்வளவு நீளமா இந்த காலத்தில யாரு சார் கூப்பிடுவாங்க ??? ஆட்டோ ஈஸியா இருக்குல்லே !!!" என்று எதிர் கேள்விப் போட்டார்.
"பாத்தியாடா உங்க தமிழ்ல எப்படி எளிமையாக்குவீங்க " என்று நக்கலடித்தான் சுரேஷ்.
" நண்பா இது நம்முடைய மொழி - நம்முடைய பிரச்சினை - நாம் முயற்சித்தால் ஒரு வழி கிடைக்கும் - நமக்கு மொழி வளம் குறைவாக இருப்பதால் நம்முடைய மொழிக்கு வளமையில்லை என்பதல்ல பொருள்- சுருங்க கூறி விளங்க வைத்த திருவள்ளுவரை மனதில் நிறுத்தி ஒரு முயற்சி செய்வோம் "
" சரி நண்பரே - என்னுடைய முயற்சி இதோ - ஆட்டோவில் மூன்று சக்கரம் உள்ளதால் "மூசக் " என்று அழைக்கலாம் , காரை -"நாசக் " என்றும் பைக்கை -"இருசக் " பஸ்ஸை "அறுசக் " என்றும் மல்டி ஆக்சில் வண்டியை "பலசக்" என்றும் அழைக்கலாம்" என்றான் சுரேஷ்.
க்ரீ ..... சக் என்று ப்ரேக் அடித்து திரும்பி பார்த்து முழித்தார் "மூசக்" ஒட்டுநர்.
No comments:
Post a Comment