முன்னுரை : இந்த சிறு நாடகம் 2008 ல் நான் பணிபுரிந்த தனியார் நிறுவனத்தில் சக ஊழியர்கள் மத்தியில் ஊழலின் பின் விளைவுகளை விளக்குவதற்காக அங்கு பணிபுரிந்த ஊழியர்களையே கதாபாத்திரங்களாக நடிக்க வைப்பதற்காக அன்றைய அரசியல் சூழ்நிலையை மனதில் வைத்து எழுதியது. 17 வருடம் கழித்து இதை படித்துப் பார்க்கும் பொழுது ஊழல் மிகு பொது வாழ்க்கையும் தனி வாழ்க்கையும் இன்றும் ஊழல், இலஞ்சம் நீக்கமற நிறைந்திருப்பதாக தோன்றுகிறது.
இதை படித்து பார்த்து நீங்களும் என் கருத்துடன் ஒத்து போவீர்கள் என்று நம்புகிறேன் - சகி.28 ஜனவரி 2026 - இன்று மஹாராஷ்டிர துணை முதல்வர் திரு அஜித் பவார் அவர்கள் விமான விபத்தில் மரணம் அடைந்தார் என்ற செய்தியை படித்தவுடன் 2008 இல் என் கையால் எழுதிய இந்த சிறுகதையின் கடைசி அத்தியாயம் உடன் பளிச்சிட்டது. நாம் எழுவதை அரசியல்வாதிகள் எப்படி எல்லாம் நிஜப்படுத்தி விடுகிறார்கள் என்று படிக்க ஆச்சரியமும், அதிர்ச்சியும் கலந்தே வருகிறது.
( இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள், நிகழ்வுகள், அனைத்தும் கற்பனையே. இது யாரையும் புண்படுத்தும் , காயப்படுத்தும் நோக்கத்தில் எழுதப்படவில்லை. அரசியல்வாதிகள் எல்லா செயல்களுக்கும் காசு கொடுத்தால் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்ற கவலையே கற்பனையாக வெளிப்பட்டுள்ளது - சகி)
அத்தனைக்கும் காசைக் கொடு
நாடகம்
காட்சி 1:
பெண் பார்க்கும் படலம்
பையன் வீட்டார்: என்ன
போடுவீங்க?
பையன் வீட்டார்: அதெல்லாம் முடியாதுங்க. அம்பது
பவுன் நகை, பையனுக்கு காரு, எவர்சில்வர், பித்தளை சாமான், கட்டில்,பீரோ, அப்புறம்
பையனோட அம்மா,அக்க, தங்கச்சி இவங்களுக்கெல்லாம் பட்டு சேலை, பையனோட அப்பா,
பெரியப்பா, சித்தப்பா இவங்களுக்கெல்லாம் பட்டு வேட்டி சட்டை வாங்கிரனும். எங்க
உறவுக்காரங்க, ஊர்க்காரங்க கல்யாணத்துக்கு வந்து போக பஸ் ஏற்பாடு பண்ணனும்.
பெண் வீட்டார்: (முணுமுணுத்துக்கொண்டே) எங்களால
அவ்வளவு முடியுமனு தோணல. யோவ் ப்ரோக்கரே முதல்லையே சொன்னோம்ல?!
ப்ரோக்கர்: நல்ல சம்பந்தம். பையனுக்கு நல்ல
வேலை.கைநிறைய சம்பளம். அவங்க அப்படித்தான் கேப்பாங்க. நம்ம பேரம் பேசிடுவோம்
பெண் வீட்டுக் காரரையும் பையன் வீட்டுக் காரரையும் வைத்து
கையின் மேல் துண்டு போட்டு பேரம் நடக்கிறது. பேரம்
படிந்தது. ஆண் ஒன்று வாங்கப்பட்டது. கல்யாணம் இனிதே நடந்தேறியது
மோ.க.காந்தி: நான் கல்யாணம் பண்ணினப்போ கஸ்தூரிபாய்
அப்பா கிட்ட எங்க அப்பா தான் வரதட்சினை கொடுத்தார். ஒரு பெண் நம்ப வீட்டுக்கு வரதே
ஒரு செல்வம் தானேனு நெனச்சோம். இப்போ ஏன் இப்படி?
காட்சி 2:
கல்யாண வீடு
மொய் வசூலிப்பவர்: மொய்! மொய்! மொய்! சாப்பிட போறதுக்கு முன்னாடி மொய் குடுத்திட்டு போங்க!
விருந்தினர்: ஒண்ணு விட்ட சித்தப்பா ருபாய் 1௦௦ இந்த எழுதிக்க மொய்.
மொய் வசூலிப்பவர்: என்னப்பா?! உங்க வீட்டு கல்யாணத்துக்கு நாங்க 5௦௦ ருபாய் எழுதிநோம்ல!
நீ என்ன நூறு ரூபா தான் எழுதற?
(வாய்ச்சண்டையில் தொடங்கி கைகலப்பும் நடந்தது )
சுப்பிரமணிய பாரதி: “என்று தணியும் இந்த பணத்தின் மோகம்?”
மோ.க.காந்தி: ஹே ராம்!
காட்சி 3: பள்ளிக்கூடம்
( குழந்தைகள்: Baba Black Sheep Have You Any
Wool? Yes Sir Yes Sir 3 Bags Full! என்று பாடிக் கொண்டிருக்கின்றன )
மோ.க.காந்தி: தமிழ் மகனே! தமிழில் கவிதை பாட மாட்டாய? நானே தமிழில் நன்றாய் கவிதை
எழுதுவேனாக்கும். இவருடைய இனிய பாடலை ஏதாவது பாடேன்.
குழந்தை: யார் இந்த மீசை மாமா?
சு. பாரதி: பாட்டுக்கொரு புலவன் பாரதி. நீ என்ன படிக்கப் போகிறாய் குழந்தாய்?
குழந்தை: LKG.
சு. பாரதி: அதற்கப்புறம்?
குழந்தை: UKG
சு.பாரதி: LKG! UKG! நீ MKG படிப்பாயா?
குழந்தை: அப்படின்னா என்ன?
சு.பாரதி: Mohandas Karamchand Gaandhi. இந்த வயதான முதியவர் தான் அது.
இவர் வாழ்க்கையே நமக்கெல்லாம் நல்ல பாடம்.
குழந்தை: பாடம்லாம் வேண்டாம். உனக்கு பாட்டு பாடத் தெரியுமா?
சு.பாரதி: எனக்கு பாடத் தெரியுமா? நல்ல கேள்வி! “ஓடி விளையாடு பாப்பா. நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா”
குழந்தை: அய்யே. இந்த மாறி பாட்டு இல்ல. குத்துப்பாட்டு தெரியுமா?
சு.பாரதி: எனக்கு கும்மிப் பாட்டு தான் தெரியும்
குழந்தை: இவ்ளோ பெரிசா இருக்க! டிவி எல்லாம் பாத்ததே இல்லையா? அப்படி போடு போடு அப்படி
போடு போடு பாட்டு தெரியாதா?
சு.பாரதி: நிற்பதுவே நடப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனம் தானோ?
பள்ளி முதல்வர் அறையில்
பெற்றோர்: எங்க குழந்தைக்கு ஒரு சீட் வேணும்.
பள்ளி முதல்வர்: Admission Fee Rs. 30,000/- Building Fund Rs. 20,000/-
Library Fee Rs. 5,000/- Lunch Rs. 5,000/- Games Fee Rs. 3,000/- Books Rs. 3,000/- Uniform Rs. 3,000/- Bus Rs. 2,000/- Donation Rs. 30.000/-
பெற்றோர்: எப்பாடுபட்டாவது எங்க குழந்தை Englishல பேசினா போதுங்க.
சு.பாரதி: இங்கிலிஷ்காரன் நம்ம விட்டு போனாலும் நமக்கு English மோகம் விடமாட்டேங்குதே
காட்சி 4: டுபாக்கூர் College Of Engineering
பெற்றோர்: ஐயா! எங்க குழந்தையை எப்படியாவது Engineer ஆக்கி பாத்துடனுங்க
கல்லூரி முதல்வர்: அதுக்குத்தானே நாங்க எல்லாம் கல்லூரி தொறந்து
வெச்சிருக்கோம்
பெற்றோர்: Admissionக்கு என்ன செய்யணும்?
கல்லூரி முதல்வர்: உங்க பையன் என்ன மார்க் வாங்கி இருக்கான்?
பெற்றோர்: 1200க்கு 400 மார்க் வாங்கி இருக்கான் சார்.
நாலே சப்ஜெக்ட்ல தான் பெயிலாய்ட்டான். September ல பாஸ் பண்ண வேச்சிடலாம்க
கல்லூரி முதல்வர்: அதெல்லாம் கவலைப்படாதீங்க. எல்லாம் பாஸ் ஆகியிருந்தா ஐந்து லட்சம், பாஸ் ஆகலைனா எட்டு லட்சம். நம்ம மாஸ்டர்
விட்டு எக்ஸாம் எழுத வெச்சு பாஸ் பண்ணிரலாம். வருஷம் Fees 1 லட்சம் தான்
பெற்றோர்: ஒண்ணும் பிரச்சனை இல்லீங்க. காசுக்கு ஏற்பாடு பண்ணிரலாம். நம்ம ஆட்சி தான்
நடக்குது. நமக்கு நல்ல கான்ட்ராக்ட் கெடைக்குது. நீங்க இவனுக்கு நாலாவது வருஷம் டிகிரி ஒண்ணு கைல
கொடுத்துட்டீங்கன்னா அதுவே போதும்.
காட்சி 5: வெற்றி வெற்றி
தமிழ் மகன்: அப்பா! அம்மா! நான் பாசாயிட்டேன்.
டிகிரி வாங்கிட்டேன்!
பெற்றோர்: நீ டிகிரி வாங்கலடா. நாங்க தான் விலை கொடுத்து வாங்கினோம். இனிமேலாவது Club, Party, Discotheனு சுத்தாம நம்ம தொழில கவனி.
தமிழ் மகன்: போப்பா! நீ என்ன தான் தொழில் பண்ணினாலும் அரசியல்வாதி கிட்ட தலைய
சொறிஞ்சிகிட்டு தான் நிக்கற. அதுக்கு எனக்கு வர எலக்சன்ல செலவு பண்ணா ஒண்ணுக்கு பத்தா சம்பாதிச்சு
கொட்றேன். எல்லா காண்ட்ராக்டயும் நாமளே போட்டு நாமளே எடுத்துக்கலாம்.
காட்சி 6: தேர்தல் களம்
தேர்தல் பிரச்சாரம்: அண்ணன் தமிழ் மகன் தேர்ந்தெடுத்த தேர்தல் சின்னம் “கவர்”.
அண்ணன் நமது தொகுதியை நன்றாக “கவர்” செய்வார். கட்சித் தலைவரை “கவர்” செய்வார்.
தேர்தலில் நாளைக்கு ஓட்டு போட வந்தால் வீட்டுக்கு ஒரு “கவர்” தருவார். ஆட்சிக்கு
வந்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் மாதத்திற்கு ஒரு “கவர்” தருவார். உங்கள் சின்னம்
“கவர்” சின்னம்.
தேர்தல் முடிவு அறிவிப்பு: தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் அண்ணன் தமிழ் மகனின் “கவர்” சென்று சேர்ந்துள்ளதால், அவரே அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார். இதனால், தமிழ் நாட்டில் “கவர்” முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. "கமுக" அமோகமாக வென்றுள்ளது என்பதை "கமுக்கமாக" தெரிவித்து கொள்கிறோம்.
காட்சி 7: தலைமை செயலகம்
தமிழ் மகன்: என்ன? நம்ம ஆட்சிய பத்தி மக்கள் என்ன
பேசிக்கறாங்க? மக்களுக்கெல்லாம் மாசாமாசம் “கவர்” போய்ட்ருக்கா?
செயலாளர்: கவர் போகுதுங்க. ஆனா அதை கொடுக்க வேண்டிய கான்ட்ராக்டர் அதில் பல சமயம் கைய
வேச்சிடுரான். அதுனால் மக்கள் மத்தியில ஒரே புலம்பல். ஆண்களும் பெண்களுமா அப்போ
அப்போ போராட்டத்துல இறங்கிடுறாங்க.
தமிழ் மகன்: யார்யா அந்த கான்ட்ராக்டர்? கவர்கே
கவரா? இனிமே மக்களுக்கு ரேஷன் சாமான்களெல்லாம் வீட்டுக்கே டெலிவர் பண்றோம்னு
அறிவிச்சுடு. டெலிவர் பண்ற காண்ட்ராக்ட என் அப்பா கம்பனிக்கு கொடுத்திடுங்க.
அப்புறம் இந்த பொம்பளைங்க ரோட்டுக்கு வந்தா தானே போராட்டம் பண்றாங்க? எல்லா வீட்டுக்கும்
ஒரு டிவி இலவசமா கொடுக்குறோம். நாம புதுசா ஒரு “கவர்” டிவி ஆரம்பிக்கிறோம். அதுல 24 மணி நேரமும் மெகா சீரியல்
போடுறோம். இப்போ லேட்டஸ்ட் நடிகை எல்லாரோடையும் காண்ட்ராக்ட் போடு. அப்புறம் பாரு.
செயலாளர்: அப்படியும் ஆம்பளைங்கள என்ன சார்
பண்ணுன்வீங்க?
தமிழ் மகன்: வாரத்துக்கு 2 குவாட்டர் வாங்கினா 2 குவாட்டர் இலவசம் னு அறிவிக்கறோம். இனிமே
ரேஷன் கடைல சரக்கு கெடைக்கும் னு சட்டத்தை மாத்திரலாம்.
செயலாளர்: வேலை செய்யறதுக்கு யார் இருப்பாங்க?
தமிழ் மகன்: அதெல்லாம் பத்தி நீ ஏன்யா கவலைப்படுற? நம்ம கொள்கையை நாம எப்புடி
மாத்திக்கறது?
சு.பாரதி: நெஞ்சு பொறுக்குதில்லையே! பிரிட்டிஷ் காலத்துல கூட காக்கை சிறகினிலே நந்தலாலான்னு
பாடிக்கொண்டிருந்தேனே. இதற்கா விடுதலை வாங்கினோம் என்று நொந்து நூலாகி விட்டேன்.
வெள்ளையன் நம்மை கொள்ளை அடிச்சதை விட “நமக்கு நாமே” திட்டம் போட்டுக் கொண்டு நம்மை
நாமே கொள்ளை அடித்துக் கொள்கிறோமே.
மோ.க.காந்தி: 1942ல் வெள்ளையனே வெளியேறு என்று போராட்டம் நடத்தினேன். அவன்
தோல் நிறம் வேறாக இருந்ததால் தெரிஞ்சுது. இன்றைக்கு வேறுபாடின்றி அத்தனைக்கும்
“காசைக் கொடுத்தாலன்றி” எதுவும் நடப்பதில்லை. இதில் என் படம் வேறு. ஒவ்வொரு
மோசடியிலும் காந்தி படம் என்று என் உருவத்திற்கு களங்கம் ஏற்ப்படுத்தி விட்டனரே.
கோட்சே என்னை ஒரு முறை தான் கொன்றார். ஆனால் இந்த இந்தியர்கள் என்னை தினம் தினம்
கொல்லுகின்றனரே. ஹே ராம்!
சு.பாரதி: நல்லதோர் வீணை செய்து அதை நலம்கெட புழிதியில் எறிவதுண்டோ! சொல்லடி சிவசக்தி எமை சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்! வல்லமை தாராயோ இந்த மாநிலம்
பயனுற் வாழ்வதற்கே
தமிழ் மகன்: (மோ.க.காந்தி மற்றும் சு.பாரதியை பார்த்து )
ஹலோ உங்க லெக்சர் எல்லாம் இப்போ மக்கள்கிட்ட வேகாது. பார்த்தீங்கல்லே. ஜனங்க
எல்லாம் நம்ம பக்கம். நீதி, நேர்மை, நாணயம் இதெல்லாம் இப்போ போனியகாது. எல்லாம்
காசு தான். அத்தனைக்கும் காசு கொடுத்தாதான் வேலை நடக்கும். என்னை யாராலையும்
அசைக்க முடியாது.
செயலாளர்: ஐயா நீங்க எல்லாம் ஊருக்கு போயிட்டு வரதுக்கு planeஐ அரசாங்க செலவுல வாங்கிறலாமா?
தலைப்புச் செய்திகள்:
இன்று முதல்வர் புதிதாக வாங்கிய விமானத்தில் பயணம் செய்த போது விபத்துக்குள்ளாகி அவர், அவர் குடும்பத்தார் 10 பேர், விமானிகள், பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட 18 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இந்த விபத்தை பற்றி ஆராய்ந்த குழுவினர் இந்த விபத்து, புது விமானம் என்று நம்பப்பட்ட விமானம் புதியதல்ல என்றும், பழைய ரிப்பேரான விமானத்திற்கு புதிய வண்ணம் பூசிக் கொண்டு வந்ததாகவும், பறக்கும்போது தான் இரு எஞ்சின்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஒரே எஞ்சின் இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது. இத்தனையும் மீறி அனுபவமிக்க பைலட் புதிய விமான தளத்தில் இறக்க முற்பட்டபோது தான் அந்த ஓடு பாதைக்கான காண்ட்ராக்டர் வழக்கமான ரோட்டை போடுவது போல் 2 கி.மி இருக்க வேண்டிய பாதையை அரை கி.மி மட்டுமே போட்டதால், விமானம் காம்பவுண்ட் சுவரில் முட்டி வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.
அத்தனைக்கும் காச கொடுத்தா -இதுவும் நடக்கும்
இதுக்கு மேலேயும் நடக்கும்.
சகி யின் " அத்தனைக்கும் காசைக் கொடு"
செப் 2008 ல் எழுதியது
28 ஜனவரி 2026 மின்னிதழ் வெளியீடு






